ஜூபோங் ஸ்ரீ பராசக்தி பச்சையம்மன் ஆலயத்தில் ஆடிப் பொங்கல் திருவிழா

கவின்மலர்

தைப்பிங்,ஆக.20-

சிம்பாங் கம்போங் ஜூபோங் அற்றங்கரை அருகில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி பச்சையம்மன் தேவி ஆலய ஆண்டு ஆடிப் பொங்கல் கூடைத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சீரும் சிறப்புமாக நடந்தேறியதாக ஆலயத் தலைவர் சிங்காரவேலன் தெரிவித்தார்.

தைப்பிங்கிற்கும் அன்றைய போர்ட் வெல்ட் அதாவது இன்றைய கோல செபெத்தாங் இடையே நாட்டின் முதல் தண்டவாளம் அமைக்கப்பட்ட காலத்தில் இங்கே குடியேறிய மக்கள் தங்களின் குலதெய்வமான பச்சையம்மனை இங்குள்ள ஆற்றங்கரை அருகே அமைத்து வழிபட்டு வந்தனர் என்று ஆலயத் தலைவர் குறிப்பிட்டார்.

ஆடி மாதம் கடைசி ஞாயிறு அன்று மிக சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவின் முக்கிய அங்கமே பெண்கள் பொங்கல் கூடை ஏந்தி வந்து பொங்கல் வைப்பதாகும்.

ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரம் சக்தி கரகம் முன்செல்ல பெண்கள் பொங்கள் பொருட்களைக் கொண்ட கூடைகளை தலையில் சுமந்து வந்து சிறப்பாக அமைப்பட்டுள்ள இடத்தில் பொங்கல் வைத்து தங்கள் குலதெய்வமான பச்சைம்மனுக்குப் படையலிடுவர்.

தங்கள் பிரார்த்தனைகளை நெஞ்சில் நிறுத்தி அம்மனிடம் மனம் உருகி வேண்டிக்கொள்வார்கள். அவ்வாறு வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் குறுகிய காலத்திலேயே நிறைவேறும் என்பது காலம் காலமாக நீடித்து வரும் நம்பிக்கையாகும்.

திருவிழா காலங்களில் பொங்கல் வைக்க இயலாதவர்கள் ஏற்ற நல்ல நாட்களில் கோயிலுக்கு வந்து கோயில் வளாகத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு விளக்கேற்றி படையல் வைப்பது வழக்கமாகும்.

கடந்த காலங்களில் அருள்வாக்கு சொல்லும் ஆலயமாக பிரசித்திப் பெற்று வந்த இந்த ஆலயத்தில் இன்றும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

பச்சையம்மன் ஆலய ஆடிப் பொங்கல் கூடைத் திருவிழா எல்லாவகையிலும் சீரும் சிறப்புமாக நடந்தேற எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தொண்டர்களுக்கும் வெளியூர் உள்ளூர் அன்பர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் சிங்காரவேலன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வழக்கம் போல இந்த ஆண்டுத் திருவிழாவில் ஆலய தோற்றுநர்களில் ஒருவரான துரைசாமியின் தொப்புள் கொடி உறவுகளான உறவினர்கள் கெடா,பினாங்கு ஜோகூர்,சபா வரை நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடினர் என்று துரைசாமியின் மகன் துரை.ஜெகநாதன் தெரிவித்தார்.

ஜெ.துரைசாமியின் பரம்பரையைச் சேர்ந்த தொப்புள் கொடி உறவுகள் ஆண்டு தோறும் ஆலயத் திருவிழாவில் ஒன்று கூடுவதை கட்டாயமாக கொண்டிருப்பதை மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் தேசிய உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் கூறினார்.

தமது துணைவியாரும் சபா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ,(எம்ஏசிசி) இயக்குநர் டத்தோ எஸ்.கருணாநிதியின் துணைவியாரும் அமரர் துரைசாமியின் பேத்திகள் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here