கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போராட்டத்தில் பங்கேற்கிறார்.
கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.
ஆனால், இந்த வழக்கு நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் குற்றவாளியாக கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 11 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக அம்மாநில மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டம் கடந்த 17ம் தேதி நாடு தழுவிய போராட்டமாக வெடித்தது.
டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.





















