ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று இந்த ஆண்டிற்கான மஹா சங்கடஹர சதுர்த்தி, வியாழக்கிழமையில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தி தினமாகும். சங்கடம் என்றால் தடைகள், கஷ்டங்கள் என்று பொருள். ஹர என்றால் வேரோடு அழிப்பது. சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டால், நமது கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை. அதோடு மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்தால் நமது அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபட முடியாதவர்கள், மஹா சங்கடஹர சதுர்த்தியன்று முழுமுதற் நாயகனை வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்த பலன் கிடைக்கும். கிரக தோஷங்கள், பாவங்கள், கர்மவினைகள் எதுவாக இருந்தாலும் அது நீங்கும்.
மஹாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை:
* மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து, குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
* அதன்பின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, விநாயகப் பெருமானை வணங்கி 11 முறை வலம் வர வேண்டும்.
* மாலையில் கோவிலில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
* இன்றைய தினம் விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
* நாள் முழுவதும் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.
* மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம் ஆகியவற்றை சொல்லுவது சிறப்பானதாகும்.