பனாஜி: மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமான பிராணியாக வளர்க்கப்படும் நாய்களால் ஏராளமான பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கோவாவில் நடந்துள்ளது. பிட்புல் நாய் மூர்க்கத்தனமாக கடித்து குதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா, பனாஜி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபாஸ் கலங்குட்கர். அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவனின் அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று சிறுவன் தன் அம்மாவுடன் அருகில் இருந்தவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு . பிட்புல் வகை நாய் திடீரென சிறுவனை கடித்து குதறியுள்ளது. பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை பிரேமானந்த், பிட்புல் நாய் என் மகனின் முகத்தை கடித்து கிழித்து அவன் தொண்டையை கவ்வுவதை பார்த்து கதறினேன். இதே நாய் சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு குழந்தையை கடித்து குதறியது. அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை தப்பித்துவிட்டது. ஆனால் எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை. என்றார் வேதனையுடன்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நில்காந்த் ஹலர்கர் கூறுகையில், மாநில அரசு இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களுக்கு தடை விதித்துள்ளோம். ஆனால் நாய்களின் உரிமையாளர்கள் நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கி வருகின்றனர். கோவாவில் இருந்தும் பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி, இதுபோன்ற நாய்களுக்கு முற்றிலும் தடை விதிப்பது, வழிகாட்டுதல்களை வெளியிடுவோம்.
இதுபோன்ற வெளிநாட்டு ஆக்ரோஷ நாய்கள் குழந்தைகளை கடிப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வருடம் இதே கோவாவில் ராட்வீலர் இரண்டு குழந்தைகளை கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியது. அதன் உரிமையாளரை காவல்துறை கைது செய்திருந்தனர். கோவாவில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2012ம் வருடம் கோவாவில் மொத்தம் 52,323 வளர்ப்பு நாய்கள் இருந்தன. அதுவே 2019ம் வருடத்தில் கோவாவில் 89,976 வளர்ப்பு நாய்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கோவாலில் சராசரியாக தினசரி 90 காய் கடி சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறையும் ஒருவர் நாய் கடிக்கு உள்ளாகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 8,700 வழக்குகள் பதிவாகியுள்ளன. பிட்புல், ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களின் பட்டியலை எடுத்து விரைவில் அவற்றை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சவந்த் கூறியுள்ளார்.