பாலியல் புகாரில் சிக்கிய நிவின் பாலி

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள பிரபல நடிகர்களுக்கு அடுத்தடுத்து விழும் பாலியல் குற்றச்சாட்டால். மலையாள திரையுலகமும், ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here