ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கி அவதியுற்ற 9 பேரை மண் அள்ளும் இயந்திரத்தால் மீட்ட ஆடவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானாவில் விடாது பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு மீட்புப் பணிகளில் இறங்கினாலும் ஆங்காங்கே மக்களும் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
அப்படித்தான் கம்மம் மாவட்டத்தின் பிரகாசம் எனும் பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகில் 9 பேர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களின் நிலையைக் கண்ட பலர் அதைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு மாநில அரசிடம் உதவி கோரினர். தகவல் அறிந்த மாநில அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பி வைத்தது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட இடத்துக்கு ஹெலிகாப்டர் சென்றுசேரவில்லை.
இந்நிலையில், இது பற்றி அறிந்திருந்த சுபான் கான் என்பவர் எடுத்த முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் மண் அள்ளும் இயந்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார். மண் அள்ளும் இயந்திரத்துடன் புறப்பட்ட சுபான் கான், சிறிதுநேரப் போராட்டத்துக்குப் பின்னர் 9 பேரையும் உயிருடன் மீட்டுத் திரும்பினார். அவரின் செயலைக் கண்டு ஊர்மக்கள் பாராட்ட, இதுபற்றிய விவரம் மாநில அரசுக்குத் தெரிய வந்தது. எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுபான் கானைப் பாராட்டினார். அதோடு, அவரின் துணிச்சலையும் மக்கள் அனைவரும் பாராட்டினர்.