பி.ஆர்.ராஜன்
நேசம், ஒற்றுமை, மரியாதை, ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு பண்புகளையும் மைஸ்கில்ஸ் அதன் உயர்நெறிகளாக அனுதினமும் அரவணைத்துக் கொண்டுள்ளது.
இந்த உயர் நெறிகள் வெறும் அரசியல் அலங்காரச் சொல்லாகவோ தேசிய தின சுலோகமாகவோ இருந்துவிடக் கூடாது என்று மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இயக்குனர் எஸ்.பசுபதி வலியுறுத்தினார்.

நம்முடைய சுதந்திரத்திற்கு அடிக்கோடிட்ட சுதந்திர தந்தையர்களின் கனவான உண்மையான மலேசிய சமுதாயத்திற்கு சிறந்த முன்னோடியாக ஹபிபுல், அத்திகா, யோங் கிட், குமுதன், சுவெட்லானா கவுர் திகழ்கின்றனர்.
எஸ்பிஎம் தேர்வு எழுதியதும் தனிப்பட்ட மேலும் குடும்ப காரணங்களுக்காக ஹபிபுல் அவரின் 19 ஆவது வயதில் மைஸ்கில்ஸ் வாழ்வியல் இல்லத்தில் சேர்ந்தார்.
எலக்ட்ரிக்கல் வயரிங் துறையில் இரண்டாம் நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்து இப்போது மைஸ்கில்ஸில் பயிற்றுனராக பணி செய்கிறார்.

அத்திகா அவரின் 14 ஆவது வயதில் மைஸ்கில்ஸில் இணைந்தார். பத்தாங் காலியில் உள்ள செமாய் ஓராங் அஸ்லி பிரிவை சேர்ந்தவர்.
இரண்டாம் படிவத்தை முடிப்பதற்கு முன்பாகவே படிப்பை பாதியில் கைவிட்ட இவர், மிக அண்மையில் கார்ப்பரேட் செயலாளர் சான்றிதழ் 3 ஆவது நிலையில் தேர்ச்சிப் பெற்று இண்டர்ன்ஷிப் பயிற்சிக்காக காத்திருக்கிறார் என்று பதி குறிப்பிட்டார்.
யோங் கிட் கோல குபு பாருவில் இருந்து வந்தவர். 16 வயதில் படிப்பை கைவிட்டவர். கல்வியில் நாட்டமில்லாத இவர் தன்னுடைய வகுப்பு மாணவர்கள் மூவருடன் மைஸ்கில்ஸில் சேர்ந்தார்.

ஏர் கண்டிஷினிங் மேலும் அதன் பராமரிப்பு துறையில் சான்றிதழ் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து இப்போது ரவாங்கில் மிகப்பெரிய இன்டாஸ்ட்ரியல் ஏர்கண்டிஷனிங் சர்விஸ் கம்பெனியில் வேலை செய்கிறார்.
குமுதன் அவரின் 13 ஆவது வயதில் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மான்டரின் மொழியில் சரளமாக பேசும் திறன் பெற்றவர்.
எலக்ட்ரிக்கல் வயரிங் துறையில் பயிற்சியை முடித்துவிட்ட இவர், தற்போது மின்சார வாகன EV டெக்னிஷியனாக வேலை செய்கிறார். இரவு வேளையில் பகுதி நேர கிரேப் ஓட்டுனராக பணி செய்கிறார்.

சுவெட்லானா கவுர் தன்னுடைய 14 ஆவது வயதில் மைஸ்கில்ஸ் வந்தடைந்தார். இப்போது அவருக்கு வயது 18. கார்ப்பரேட் செயலாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்கும் இவர், தற்போது ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணி செய்கிறார்.
இந்த ஐவரும் வெவ்வேறு இனம், சமயம், கலாச்சார பின்னணிகளை கொண்டவர்கள். சமூக, பொருளாதார சவால்களை எதிர் கொண்டிருப்பவர்கள்.

ஆனால் ஒருவரையொருவர் நேசித்து, மதித்து உண்மையான மலேசியர்களாக சுபிட்சத்துடன் அழகான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதி கூறினார்.
மலேசியாவுக்கு மைஸ்கில்ஸின் ஒரு சிறிய அன்பு பரிசு இது. இன ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான முதல் படி.
பெருமைமிக்க, கவுரமிக்க மலேசியர்களாக வாழ்வோம் என்று பதி வலியுறுத்தினார்
























