உலக அரங்கில் மலேசிய இளம் விஞ்ஞானிகளின் ஆற்றல், ஆளுமைக்கு நனிசிறந்த அங்கீகாரம்

பி.ஆர்.ராஜன்

2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள் அமைப்பு கடந்த 14 ஆண்டுகளில் பல இளம் விஞ்ஞானிகளை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. உலக அளவில் சாதனைகளை குவித்திருக்கிறது.

மலேசிய இளம் விஞ்ஞானிகளின் இந்த சாதனைகளுக்கு பின்னணியில் இந்த அமைப்பின் உழைப்பு அதீதமானது.

15 தமிழ்ப்பள்ளிகள், 3 இடைநிலைப்பள்ளிகள், ஒர் உயர் கல்விக் கழகம், ஒரு பாலர் பள்ளி ஆகியவற்றை பிரதிநிதித்து மொத்தம் 231 மாணவர்கள் 35ஆவது அனைத்துலக கண்டுபிடிப்பு புத்தாக்கம், தொழில்நுட்பம் கண்காட்சியில் பங்கேற்றனர்.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 49 குழுக்கள் உலக அரங்கில் மலேசியாவை பிரதிநிதித்தன. இதில் 34 தங்கப்பதக்கங்கள், 15 வெள்ளிப் பதக்கங்கள் வென்று மிகப் பெரிய சாதனையை பதிவு செய்தன.

இவற்றோடு ஆரம்பப் பள்ளி சிறந்த கண்டுபிடிப்பு பிரிவில் 2 விருதுகளையும் உயர்கல்வி பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான ஒரு விருதையும் மலேசிய குழுவினர் வென்றனர் என்று இந்த அமைப்பின் ஆணிவேர்களில் ஒருவரான சண்முகநாதன் ராமநாதன் தெரிவித்தார்.

இந்த வெற்றியானது தேசிய எல்லைகளைக் கடந்து வியட்நாமிய நனி சிறந்த கண்டுபிடிப்பு விருதையும் பெற்றுத்தந்தது.

2024 மே 16,17,18 ஆகிய மூன்று தினங்கள் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) நடைபெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்பதற்கு 3 மாதங்கள் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சிகளின் தாக்கம் பதக்கங்களையும் சிறப்பு விருதுகளையும் வெல்வதற்கு வழி வகுத்தது என்பதை சுட்டிக்காட்டிய அவர், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, தைவான், ஹாங்காங், ஓமன், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களுக்கு ஈடாக களம் இறங்கி மலேசிய இளம் விஞ்ஞானிகள் அவர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் நிரூபித்தனர்.

உலக அரங்கில் இவர்களின் இந்த அறிவியல் ஆளுமையைக் கண்டு இந்த நாடுகள் பிரமித்தன.

இந்த வெற்றிகள் அனைத்தும் மலேசிய இளம் விஞ்ஞானிகள் மத்தியில் எழுச்சி பெற்ற ஆர்வம், புத்தாக்கச் சிந்தனை ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக பிரதிபலித்தன. ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கரம் சேர்ந்தால் இந்த இளம் அறிவியல் விஞ்ஞானிகளின் வெற்றிகளை வரலாற்றுத் தடமாக பதிவு செய்திட முடியும் என்று சண்முகநாதன் குறிப்பிட்டார்.

இளம் விஞ்ஞானிகள் அமைப்பு கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here