காசாவில் உள்ள ஐ.நா. பள்ளி, வீடுகள் மீது வான்தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தாக்குதல் நின்றபாடியில்லை.

இந்த நிலையில் நேற்றிரவு காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐ.நா. நடத்தி வரும் பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பெண்கள், குழந்தைகள் உள்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு மேற்கு கரை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதுடன் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு வான்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த பயங்கரவாதிகள் என இஸ்ரேல் தெரிவித்தள்ளது. கார் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.நா. பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள், பெண் ஒருவர் அடங்குவார்கள். 18 பேர் காயம் அடைந்தனர்.

பள்ளிக்கூடத்திற்கு உள்ளே இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அது உண்மையான தகவலா என்று தெரியவில்லை.இஸ்ரேல் தாக்குதல் மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுங்கள் என்ற உத்தரவால் காசாவில் உள்ள ஐ.நா. பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் உள்ள 90 சதவீதம் பள்ளிகள் இஸ்ரேல் தாக்குதலில் சேதம் அடைந்துள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,084 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 95,029 பேர் காயம் அடைந்துள்ளனர்.

புதன்கிழமை அதிகாலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆறு பேர் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆவார்கள். செவ்வாய்க்கிழமை இரவு ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here