ஜோகூர்:
சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்துவித அநியாயங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதற்கான பங்களிப்பை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று ஜோகூர் மாநில சே புவான் மக்கோத்தா கலிடா வலியுறுத்தினார்.
1 வயது குழந்தை முதல் 17 வயதுக்குட்பட்ட 402 பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் சில சமூகநல இல்லங்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.
அதிகாரிகள், அரசு சார்பற்ற அமைப்புகள் பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் சிறார்களின் நலன்களை பேணுவதில் அக்கறைச் செலுத்த வேண்டும்.
சிறார்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
சிறார் பாதுகாப்பு மையங்கள், சமூக நல இல்லங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் ஆக்கப்பூர்வமான வலுவான திட்டங்களைக் கையாள வேண்டியது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான அவலங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறாதிருப்பதை உறுதிச் செய்ய கணக்காய்வுகள், கண்காணிப்புகள் அதிகரிக்கப்படுவது உள்ளிட்ட பலவகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பாதிக்கப்பட்ட அந்த 402 சிறார்களின் நிலை பாதுகாக்கப்பட சீரான, உத்தரவாதம் மிகுந்த திட்டங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது போன்ற அருவறுக்க தக்க சம்பவங்கள் நடந்தால், எந்த வித சமரசமும் இன்றி நீதியின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை நாம் அனைவருமே கொண்டிருக்கிறோம் என்பதையும் அவர் சுட்டி காட்டினார்.























