கோலாலம்பூர்:
எரிபொருள் மானியங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தைக் குறைக்க உதவும் அதே வேளையில், அவை எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைக்க மானியங்களை வழங்குவதை அரசு நீண்ட காலமாக செயல்படுத்தி வந்தாலும், அவற்றை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான செலவு, நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
எரிபொருள் மானியங்கள் அதிகரித்து வரும் செலவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க உதவும் அதே வேளையில், அவை அதிகப்படியான பயன்பாடு, அதன் பெறுமதி புரியாமலிருத்தல், உயர் வருமானம் கொண்டவர்களும் பயனடைதல் போன்ற எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

“மானியங்களை தொடருவதா அல்லது குறைத்துக்கொள்ளுவதா அல்லது நிறுத்துவதா என தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது, ஆனால் நாம்தான் அதை கடந்துவிட்டோம்,” என்று பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி வில்லியம்ஸ் கூறினார்.
”அதாவது மானியங்கள் தரும் நன்மைகள் குறைந்து, அதற்கான செலவுகள் அதிகரிக்கும் போது ஏற்படும் சாதக பாதகங்கள் கவனிக்கப்பட வேண்டியது என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், இதில் மானியங்களின் செலவு நமக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது மட்டுமல்ல, அவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அவற்றால் எழும் விளைவுகளும் சவாலானதாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
விரைந்து செயல்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள்!
மானியங்கள் மோசமானவை அல்ல என்றாலும், தற்போதைய நடைமுறையிலுள்ள மானிய செயல்முறைகள் அவற்றின் தேவை அவசியமில்லாதவர்களுக்கே அதிக பயனைத் தருகின்றன.”
“இங்குதான் இலக்கு தவறுகிறது. இதில் பயனடைவது உண்மையில் மானியம் பெறவேண்டியவர்கள் அல்ல!. செல்வந்தர்களே பெரும்பாலான நன்மைகளை பெற்றுக் கொள்கிறார்கள்,” என்று பொருளாதார நிபுணர் மேட்லைன் பெர்மா கூறினார்.
இருப்பினும், சல் மானியங்களை இலக்காகக் கொண்டு வருவதிலும், “Budi Madani” திட்டம் போன்ற இலக்கு முயற்சிகளைத் தொடங்குவதிலும் அரசாங்கம் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் கூறினார்.
நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் சுமார் RM7 பில்லியனை சேமிக்க உதவியது, கடத்தல் மற்றும் கசிவு கணிசமாகக் குறைக்கப்பட்டது.
“ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இலக்கு தாமதமானால், உண்மையின் நன்மை பெறும் பிரிவினருக்கும் வழங்கப்படும் மானியங்கள் நஷ்டங்களைத் தரும். மேலும் வீணடிப்புகளை ஊக்குவிக்கும்,” என்று மலாயா பல்கலைக்கழகத்தின் கோ லிம் தை கூறினார்.
RON95 எரிபொருள் மானியத்தில் கிட்டத்தட்ட 40% அதாவது RM8 பில்லியன் தொகை, மக்கள் தொகையில் 15% பணக்காரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் பயனளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், எரிபொருள் மானியங்கள் வருடத்திற்கு RM50 பில்லியனைத் தாண்டிய நிலையில், அது சுகாதாரத்துறை மற்றும் உள்கட்டமைப்புக்கான பட்ஜெட்டை விட அதிகமாகும்.
“கசிவு மற்றும் சரியான ஆளுமையின்மையால் இழந்த மானிய நிதியை, சுகாதாரப் பராமரிப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு அல்லது கல்வி அல்லது காலநிலை மீள்தன்மை போன்ற அதிக உற்பத்தித் துறைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் வீணாகிவிட்டது. இது நியாயமற்றதும் கூட,” என்று கோ லிம் தியே கூறியுள்ளார்.
“இதில் முக்கியமான இன்னொரு பாதகம் ‘மறைமுக செலவு’. நீண்டகாலமாக தொடரும் மானியங்களால் மக்கள் மனதில் “மானியம் பெறுவது உரிமை” என்ற உணர்வை ஏற்படுத்தும், அவர்கள் அதற்கு பழக்கப்பட்டுவிடுகிறார்கள் அதன் காரணமாக சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது கடினமாகிறது, அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு குறைய வாய்ப்பு உள்ளது. மானியங்கள் வழியாக அளிக்கப்படும் காப்புறுதி, நாட்டின் பொருளாதாரத்திறனை நீண்ட காலத்தில் பாதிக்கும்” என்று வில்லியம்ஸ் கூறினார்.
அத்தோடு மானியங்கள் மூலம் வழங்கப்படும் அதிகப்படியான பாதுகாப்பு நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் என்றார் அவர்.
“நிறுவனங்கள் மானியங்களால் பாதுகாக்கப்பட்டால் அவை உலக சந்தையில் குறைவான போட்டித்தன்மை கொண்டவையாக மாறும், இது மலேசியாவை ஒட்டுமொத்தமாக குறைந்த போட்டித்தன்மை கொண்ட நாடாகவும், சுறுசுறுப்பற்ற மற்றும் புதிய வாய்ப்புகளற்ற நாடாகவும் மாற்ற வழிவகுக்கும் ” என்று அவர் கூறினார்.
எனவே சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் போனால், மலேசியா அதன் நிதி இலக்குகளைத் தவறவிடும் அபாயம் உள்ளது, இதனால் முதலீட்டாளர்களுக்கு மலேசியா மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று மேட்லைன் கூறினார்.
“இலக்கு மானியம் என்பது வெறும் பொருளாதாரம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல; அது ஒரு நாட்டின் நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால பொருளாதார மீள்தன்மை பற்றியது,” என்கிறார் அவர்.



















