வாஷிங்டன்: விமானத்தினுள் காற்றழுத்தம் குறைந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் டெல்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அச்சம்பவத்தின்போது பயணிகளின் பலரது காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.செப்டம்பர் 15ஆம் தேதி சால்ட் லேக் சிட்டியிலிருந்து போர்ட்லேண்டிற்கு அவ்விமானம் சென்றபோது நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை விசாரித்து வருகிறது.
மொத்தம் 140 பயணிகளுடன் பறந்த அவ்விமானம் 10,000 அடிக்குமேல் பறக்க முடியவில்லை என்று டெல்டா நிறுவனம், மின்னஞ்சல் மூலம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.விமானம் தரையிறங்கியதும் பத்துப் பேரை மருத்துவப் பணியாளர்கள் பரிசோதித்ததாக அல்லது சிகிச்சை அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“என் காதைப் பிடித்துக்கொண்டேன். பின்னர் என் கையைப் பார்த்தபோது அதில் ரத்தம் காணப்பட்டது,” என்றார் திருவாட்டி ஜேசி.விமானத்தின் உயிர்வாயு முகக்கவசங்கள் செயல்படவில்லை எனக் கூறப்பட்டது.
உடனடியாக அந்த 737-900 விமானத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு, மறுநாளே அது சேவைக்குத் திரும்பியதாக டெல்டா நிறுவனம் தெரிவித்தது.