தோக்கியோ: மத்திய ஜப்பானில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல் ஒன்று திங்கட்கிழமை (செப். 23) தெரிவித்தது.
சனிக்கிழமை முதல் பெய்த கனமழையால் இஷிகாவாவில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள விஷிமா நகரில் 72 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையின் அளவு 540 மில்லிமீட்டர் எனப் பதிவானது.
மழை ஓய்ந்த பின்னர் 4,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதாக ஹோகுரிகு மின் விநியோக நிறுவனம் கூறியது.
நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் தனித்தீவுகள் போல தொடர்பறுந்து இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.