ஆஸ்திரேலியாவில் மலேசிய தேசியக் கொடியை கம்பத்தில் இருந்து இறக்கி, சபா மற்றும் சரவாக் கொடிகளை ஏற்றிய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாக போலீஸ் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். 36 வயதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
எங்கள் விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் நாடு திரும்பியமைக்கான பதிவுகள் எதுவும் இல்லை எனவும் ரஸாருதீன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோவை சபாவில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த மற்றொரு நபருடன் சந்தேக நபரின் தொடர்பு குறித்து போலீசார் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.
இந்த வீடியோவை பதிவு செய்த நபர் குற்றப் பின்னணி கொண்ட சபாஹான் என்று ரஸாருதீன் முன்பு தெரிவித்திருந்தார். திங்களன்று, 35 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், வைரலான வீடியோ மீது விசாரணையைத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
தேசியக் கொடி கூடிய தற்காலிக கொடிக்கம்பத்தை ஒரு குழுவினர் ஏற்றி அதை கீழே இறக்கிய வீடியோ வைரலானது. பின்னர் அவர்கள் அதை சபா கொடியுடன் மாற்றினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விக்டோரியா நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளார்.









