கோலாலம்பூர்:
தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடர்த்தியான அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில், சாலைகளின் இரு புறங்களிலும் முறையற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் குப்பை சேகரிக்கும் லாரிகள் செல்ல முடியாமல் திணறும் காணொளி சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இக்காணொளி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள நெட்டிசன்கள், மலேசியர்களின் அதீத வாகனச் சார்பு மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்தும் கலாசாரமே இச்சிக்கலுக்கு முதன்மைக் காரணம் எனச் சாடியுள்ளனர்.
அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்களோ அல்லது ஆம்புலன்ஸ்களோ இத்தகைய குறுகிய பாதைகளைக் கடக்க முடியாமல் போனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், ஜப்பான் நாட்டைப் போன்று சொந்தமாக வாகன நிறுத்துமிடம் இருப்பதை உறுதி செய்த பின்னரே புதிய வாகனங்களை வாங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
முறையான வாகன நிறுத்துமிட வசதிகள் இன்றி மாதந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய வாகனங்கள் சந்தைக்கு வருவது, நகர்ப்புற குடியிருப்புகளில் எதிர்காலத்தில் பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




















