அட்லாண்டா: அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியை ‘ஹெலன்’ புயல் உலுக்கியது.
ஃபுளோரிடாவில் புயல் கரை கடந்தபோது அது மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சீறியது. ஃபுளோரிடா உட்பட அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களைப் புயல் சூறையாடியதில் குறைந்தது 43 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நான்கு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள், வர்த்தகங்கள் மின்சாரம் இன்றி தவித்தன.புயல் காரணமாக செப்டம்பர் 27ஆம் தேதியன்று வடகெரோலைனா, தென்கெரோலைனா ஆகிய மாநிலங்களில் மிக மோசமான வெள்ளம் கரைபுரண்டோடியது.
செப்டம்பர் 26ஆம் தேதியன்று ஃபுளோரிடாவின் ‘பிக் பென்ட்’ பகுதியைப் புயல் தாக்கியதில் துறைமுகங்களில் இருந்த பல படகுகள் கவிழ்ந்தன.அதுமட்டுமல்லாது, மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் வெள்ளத்தில் பல கார்களும் சாலைகளும் மூழ்கின.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.அட்லாண்டாவில் வெள்ளம் காரணமாகக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றிலிருந்து குடியிருப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 27ஆம் தேதி பிற்பகல் புயல் ஜார்ஜியாவை அடைந்தபோது வலுவிழந்து கனமழையுடன் கூடிய பலத்த காற்றாக மாறியது.இந்நிலையில், கனமழை தொடர்வதால் சில இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாகவும் அங்குள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்திலிருந்து தப்பிக்க டெனசியில் உள்ள மருத்துவமனையின் கூரை மீது 50 பேர் ஏறி உதவிக்காகக் காத்துக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.தம்பா நகரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 78 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாஸ்கோ கவுன்டி ஷெரிஃப் அலுவலகம் இரவோடு இரவாக 65க்கும் மேற்பட்டோரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.புயல் காரணமாகக் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் கடலிலிருந்து ஒன்பது பேரைக் காப்பாற்றியதாகவும் அமெரிக்கக் கடலோரக் காவல் படை கூறியது.
படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவரையும் அவரது நாய்க்குட்டியையும் அமெரிக்கக் கடலோரக் காவல் படை காப்பாற்றியது.