தொந்தி உள்ளவர்கள் சில சமயம் அதை பெரிய பிரச்சினையாக கருதுவதில்லை. ஆனால் ஒருவருக்கு தொந்தி இருப்பது மிகவும் ஆபத்தானது. தொந்தியால் சில கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக விஸ்செரால் எனப்படும் ஒரு வகை கெட்ட கொழுப்பு மனிதர்களுக்கு மிக மிக ஆபத்தானது. காரணம் இந்த கெட்ட கொழுப்பு கல்லீரல், கணையம், குடல் போன்ற உள்உறுப்புகளில் கொஞ்சம் கொஞ்சமாக தேங்கும் போது நோய்கள் உண்டாகும் என மலேசிய பொது சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த வகை கெட்ட கொழுப்பு ஆபத்தினை விளைவிக்கும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவை நமது உடலில் உள்ள முக்கிய உடல் உறுப்புகளை முடக்கி விடும். இதனால் நம்முடைய உள் உறுப்புகள் சீராக இயங்குவதில் இடையூறுகள் ஏற்படும். உடலுக்குள் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தேங்கும் இந்த கெட்ட கொழுப்பு இராசாயணத்தை விடுவிடுக்கும் போது அது உடல் நலத்தை சீர்குலைக்கும். இந்த கெட்ட கொழுப்பு காரணமாக உடல் நலத்தை சீர்குலைக்கும் நோய்களுள் மாரடைப்பு, புற்றுநோய், ரத்த கொதிப்பு, உடல் சோர்வு, மிதமிஞ்சிய கொழுப்பு ஆகியவை அடங்கும் என்று அந்த அமைப்பு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மிதமிஞ்சிய அளவு சீனியை எடுத்து கொள்ளுதல், மிதமிஞ்சிய கொழுப்பு, மன அழுத்தம் போன்றவற்றால் உடலுக்குள் கொட்ட கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து விடுகிறது. ஆகவே வயிற்றில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு தொந்தி விழுவதாக கருதினால் யாரும் அதை வழக்கமான தொந்தி தானே என்று கருதி விடக்கூடாது. தொந்தி விழுந்தால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அது நினைவுறுத்தியது.