கோலாலம்பூர்:
பண்டார் டெக்னாலஜி, காஜாங் உள்ள ஒரு தொழிற்பேட்டை வாடகை அறையில் ரத்தக்கறை படிந்த நிலையின் நேற்று கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் தொடர்பில், அவரை கொலை செய்த வழக்கின் விசாரணைக்கு உதவ 28 முதல் 45 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து மியன்மார் நாட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அனைத்து சந்தேக நபர்களும் நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பண்டார் டெக்னாலஜி மற்றும் செமினி ஆகிய பகுதிகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
சோதனையின் போது, சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து கத்தி மற்றும் இரத்தக்கறை படிந்த ஆடைகளை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.
“பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த தகவல், நேற்று அதிகாலை 1.09 மணியளவில் 52 வயதான உள்ளூர் ஆணிடமிருந்து பெறப்பட்டது என்றும் , 40 வயதான பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவின்றி, இரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும் அவர் போலீசாருக்கு புகாரளித்தார்.
“சம்பவ இடத்தில் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் 12 கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாகவும் , அவரது உடல் அந்த அறைக்குள் ஒரு மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ” அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
“இன்று காலை 10 மணிக்கு மருத்துவமனை செர்டாங்கின் நோயியல் நிபுணரால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், பாதிக்கப்பட்டவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்பட்தால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று அவர் உறுதிப்படுத்தினார்.
“இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் பொறாமை என்று நம்பப்படுகிறது”.
அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள், ”என்றும், இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.









