கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் யூ தான்ட் (Jalan U Thant) சுற்றுவட்டாரத்தின் சில முக்கியச் சாலைகள், நிலத்தடி குழாய் பதிக்கும் பணிகளுக்காக வரும் திங்கள் கிழமை முதல் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) அறிவித்துள்ளது.
இந்த மூடல் நடவடிக்கையில், ரீகல் ஹவுஸ் (Regal House) அருகேயுள்ள ஜாலான் யூ தான்ட்டிலிருந்து ஜாலான் துன் ரசாக் செல்லும் வழியும், ஈராக் தூதரகம் அருகேயுள்ள ஜாலான் துன் ரசாக்கிலிருந்து ஜாலான் லங்காக் கோல்ஃப் செல்லும் நுழைவாயிலும் அடங்கும்.
மேலும், இக்காலக்கட்டத்தில் ஜாலான் லங்காக் கோல்ஃப் சாலை ஜாலான் துன் ரசாக் நோக்கிச் செல்லும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படும் என்றும் மாநகர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், ஜாலான் துன் ரசாக்கிலிருந்து ஜாலான் யூ தான்ட், ஜாலான் மாட்ஜ் மற்றும் அம்பாங் ஹிலிர் பகுதிக்குச் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள், மாற்றுப் பாதையாக ஜாலான் யூ தான்ட் நுழைவாயிலைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் 012-264 2310 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.



















