தெய்வங்களில் முருகப் பெருமானுக்கும், திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும் மட்டுமே அரோகரா கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபடுவார்கள். அதிலும் முருகன் என்ற திருநாமத்தை சொல்லி முழக்கமிடும் போதே அடுத்தபடியாக அரோகரா என்ற கோஷமும் தானே வந்து விடும். திருப்பதி பெருமாளுக்கு கோவிந்தா கோஷமிடுவதை போல, முருகனுக்க மட்டும் அரோகரா கோஷம் எதற்காக எழுப்பப்படுகிறது என்பதை தெரிஞ்சுக்கலாம்.
“அர ஹரோ ஹரா” என்ற சொற்களின் சுருக்கமே அரோஹரா அல்லது அரோகரா. “இறைவா, எங்களின் துன்பங்களை நீக்கி, எங்களுக்கு நற்கதியை வழங்கி அருள் செய்” என அழைப்பது தான் அரோகரா என்ற சொல்லுக்கு அர்த்தம். இப்படி அரோகரா கோஷம் எழுப்பும் முறையை துவங்கி வைத்தவர் திருஞானசம்பந்தர் தான். ஆரம்பத்தில் சைவர்கள் மட்டும் சொல்லி வந்த இந்த முழக்கம் காலப் போக்கில் குறைந்து போனது. பிறகு கெளமாரம் எனப்படும் முருகனை முதன்மை தெய்வமாக கொண்டவர்கள் இந்த முழக்கத்தை கடைபிடிக்க துவங்கினர்.
ஒருமுறை திருஞானசம்பந்தர் பல்லக்கில் பயணம் செய்த போது அந்த பல்லக்கை சுமந்து சென்றவர்கள் களைப்பு தயரியாமல் இருப்பதற்காக “ஏலே லோ ஏலே லோ” என்று பாடி சென்றனர். இதை கேட்ட திருஞானசம்பந்தர், அர்த்தம் இல்லாத ஒரு வார்த்தையை சொல்வதற்கு பதில் அர்த்தமுள்ள ஒரு சொல்லை கூறினால் களைப்பும் தீரும், அளவில்லாத புண்ணிய பலனும், இறையருளும் அவர்களுக்கு வந்து சேரும் என்று “அர ஹரோ ஹரா” என்ற சொல்லை கற்றுக் கொடுத்தார். பிறகு அதுவே சுருங்கி அரோகரா என்று மாறியது.
தமிழில் அர் என்ற சொல் சிவப்பு நிறத்தை குறிப்பதாகும். சிவந்த மேனியை உடையவன் என்பதை குறிப்பதற்காகவே சிவனை அரன் என்று குறிப்பிடுவதுண்டு. பக்தர்களுக்கு கருணையை, அருளை வாரி வழங்க சிவந்திருக்கும் முகத்தையும், கரங்களையும் உடைய தெய்வம் என்பதை குறிப்பதற்காகவும் முருகனை அரோகரா என்று குறிப்பிடுகிறோம். முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்றொரு பொருள் உள்ளது. சிவந்த முகத்துடன் அழகாக காட்சி தரும் தெய்வம் என்பதாலும் அவரை அரோகரா நாமத்தை சொல்லி எளிய பக்தர்கள் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அரோகரா என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளும் சொல்லப்படுகிறது. அதாவது, அரோகரா என்ற சொல்லில் ஹரி என்பது விஷ்ணுவையும், அரன் என்ற சொல் சிவனையும் குறிக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களுமே முருகப் பெருமான் ஒருவருக்குள் அடக்கம் என்பதால் முருகனை அரோகரா என்ற சொல்லால் முழக்கமிட்டு பக்தர்கள் வணங்கும் முறை ஏற்பட்டது. அரோகரா, அரோகரா என்று சொன்னால் துன்பங்கள், பாவங்கள், நம்மை தொடர்ந்து வரும் கர்மவினைகள் அறுந்து போகும் என்பது நம்பிக்கை.