கோலாலம்பூர்:
சிலாங்கூரில் உள்ள காஜாங்கில் செயல்பட்ட 29 வெளிநாட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘காங் ஜான்’ எனப்படும் கடத்தல் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்தது.
‘போக்குவரத்து செய்பவராக’ செயல்பட்ட ஜோன் என்று அழைக்கப்படும் 42 வயதான இந்தோனேசிய நபர், அவரது கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் உதவியுடன் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புத்ராஜெயா குடிநுழைவு துறையின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு மாலை 6 மணியளவில் இந்த சோதனையை மேற்கொண்டது என்று, குடிநுழைவுதுறை டைரக்டர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.
இரண்டு வாரங்களாக மேற்கொண்ட உளவுத்துறை நடவடிக்கையை தொடர்ந்து, குழுவினர் குறித்த குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில், அந்த வளாகத்தின் பராமரிப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 20 மற்றும் 41 வயதுடைய இரண்டு இந்தோனேசியர்களையும் கைது செய்ய முடிந்தது என்று அவர் சொன்னார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 50 வயதுக்குட்பட்ட 21 இந்தோனேசிய ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளனர் என அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட சோதனையில் 13 வெளிநாட்டவர்கள் அதிக காலம் தங்கியிருப்பதும், மீதமுள்ளவர்களிடம் சரியான பயண ஆவணங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.
குறித்த குழுவிடமிருந்து 14 இந்தோனேசிய கடப்பிதழ்களையும், 13,430 ரிங்கிட் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்ததாகவும், கடத்தலில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் டொயோட்டா வியோஸ் காரையும் பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.
“இந்தக் கும்பல் நாட்டுக்குள் கடத்தப்படும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் RM1,500 மற்றும் RM2,500 வரை வசூலிக்கிறது, மேலும் இது ஆறு மாதங்களாக செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வழக்கு நபர் கடத்தல் தடுப்புச் சட்டம் (Atipsom) 2007, குடியேற்றச் சட்டம் 1959/63 மற்றும் பிரிவு 15(4) இன் பிரிவு 26J மற்றும் பிரிவு 26H இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.