குடும்ப உறவுகளை வலுப்படுத்த தேசிய குடும்ப மாதத்தைக் கொண்டாடுவோம்

         2024 நவம்பர் மாதத்தை தேசிய குடும்ப மாதமாக  அனைவரும்  கொண்டாட வேண்டும். சமுதாயத்தின் சுபிசத்திற்கு  ஒரு திறவுகோலாக குடும்பங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடும்பமும்  இதில் பங்கேற்க வேண்டும். 

          ஒரு குடும்பம் என்பது நாட்டின் சங்மூகம்,  பொருளாதாரம்,  கலாச்சாரம் ஆகியவற்றின் மேம்பாட்டில் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிந்தனையில் உருவான மடானி குடும்பம் இதற்கு ஆதாரமாக  விளங்குகிறது.

           மடானி குடும்பம் மனிதம்,  நல்வாழ்வு,  சமூக நீதி  ஆகிய பண்பு நலன்களை வலியுறுத்துகிறது.  இதன் வழி பொறுப்பு, நன்னெறிமிக்க  ஒரு தனி நபரை உருவாக்குவதில் ஒரு குடும்பத்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது.

           குடும்ப தினம் என்பது தேசியம், மாநிலம்  அளவில்  அனைத்து அமைச்சுகளிலும் ஏஜென்சிகளிலும்  ஓர் ஆண்டு விழாவாக  நிரந்தரமாகக் கொண்டாடப்படும். அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்கேற்ப இவ்வாண்டு தொடக்கம்  மலேசிய குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.   ஒவ்வோர் ஏஜென்சி சக்திக்கேற்ப குடும்ப நல்வாழ்வுத் திட்டங்கள் அமல்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

          இந்த சித்தாந்தத்தை மகளிர், குடும்பம், சமுதாய மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜா நான்சி ஷுக்ரி மனதார வரவேற்கிறார். மலேசியாவில்  குடும்ப தினம் என்ற சித்தாந்தம் குடும்ப உறவுளை வலுப்படுத்துவதற்கு  ஆழமான ஒரு கட்டமைப்பாகத் திகழும்.

          மலேசிய மடானி கோட்பாட்டின் வழி பெற்றோரியல் உட்பட வேலை செய்யும் பெற்றோருக்கு ஆதரவாகவும்  பிள்ளைகளையும்  மூத்த பிரஜைகளையும்  கண்காணிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள், கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

          தேசிய மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் (எல்பிபிகேஎன்) வழி மகளிர், குடும்பம், சமுதாய மேம்பாட்டு அமைச்சு ரூமா காசே மடானி (மடானி அன்பு இல்லம்) என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்திருக்கிறது. தேசிய மலேசிய மடானி  நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அடித்தளமாக  நான்கு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

          ஸ்மார்ட் ஸ்டார்ட் 2.0 எனப்படும்  திருமணத்திற்கு முந்தைய  பயிற்சித் திட்டம், டிஜிட்டல் பெற்றோரியல் அன்பு திட்டம்,  அன்பு முகாம் திட்டம்,  மகிழ்ச்சிமிக்க குடும்ப அன்பு ஆகியவையே அந்த நான்கு அடிப்படைத் திட்டங்களாகும்.

           இந்த நான்கு திட்டங்களும் மலேசிய மடானி விருப்பங்களுக்கு ஏற்ப  நல்வாழ்வு,  நீடித்து நிலைபெறுதல், மாண்புக்குரிய தனி நபர் உருவாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு உதவும் என்று டத்தோஸ்ரீ ஹாஜா நான்சி ஷுக்ரி குறிப்பிட்டார்.

          சுற்றுலா, குடும்ப மேம்பாட்டு விற்பனை போன்ற திட்டங்கள் தனியார் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.   இத்திட்டங்களில் பங்கேற்பதற்கும் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் அதிகமான நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு அரசாங்கம் முழு ஆதரவு நல்கும் என்று அவர் சொன்னார்.

          இந்தப் பயிற்சிகளில் பெற்றோரியல் திறன் குடும்ப மேம்பாடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவ்வாண்டு நவம்பர் மாதம் முழுவதும் இந்த வாய்ப்புகள் வழங்கப்படும்.  இந்தப் பயிற்சிகளை நடத்திடுவதற்கு எச்ஆர்டி கார்ப் எனப்படும்  மனிதவளங்கள் மேம்பாட்டு கார்ப்பரேஷன் வழி செலவுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

          2024 நவம்பர் தேசிய குடும்ப தினக் கொண்டாட்டமானது நாட்டின் குடும்பக் கொள்கை வியூகத்தின் கட்டமைப்புகளில் ஒன்றாகும் என்று  தேசிய மக்கள் குடும்ப மேம்பாடு வாரியத்தின் தலைமை இயக்குநர் அப்துல் சுக்கோர்  அப்துல்லா கூறினார்.

          குடும்ப உறுப்பினர்களின் தியாகங்கள், அவர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றுக்கு  நன்றி சொல்லும் ஒரு நாளாகவும் இந்தக் கொண்டாட்டம் அமையும். குடும்ப உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் சமுதாயத்திற்கு இக்கொண்டாட்டத்தின் வழி கற்றுத்தரப்படும்.  குடும்ப உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில்  பல்வேறு தரப்பினரின் கடப்பாடுகளை உறுதி செய்வதற்கும் இக்கொண்டாட்டம் ஒரு திறவுகோலாக அமையும் என்று அவர் கூறினார்.

          2024 நவம்பர் குடும்ப தினக் கொண்டாட்டாட்டத்தில் கார்ப்பரேட் துறை, ஊராட்சித்துறை ஆகியவற்றுக்குப்  பரிவுமிக்க குடும்ப விருது வழங்கப்படும். இவ்விருதினைப் பெறுவதற்கு  டெலிகோம் மலேசியா, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) தேர்வு செய்யப்பட்டுள்ளன.

          பணி இடங்களில் மட்டுமன்றி பொதுவாக மகிழ்ச்சிமிக்க குடும்பத் திட்டங்களில்  பங்கேற்பதற்கும் ஆதரவைப் பெறுவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது அறிமுகம் ஙெ்ய்யப்பட்டிருக்கிறது. மேலும்,  உள்ளூரில் பல்வேறு சமூக திட்டங்களை- நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்  இந்த விருது ஓர் ஊக்குவிப்பாகத்  திகழும்.

          அதேசமயத்தில்  இந்தக் கொண்டாட்டத்திற்குச் செலவிடப்படும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கு உதவும் தரப்புகளுக்கு  நினைவுச்சின்னம் வழங்கப்படும். இதற்கான செலவு 100 விழுக்காட்டைத் திரும்பப் பெற முடியும்.

          இது தவிர, சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு மலேசிய சுற்றுலாத் துறை வழியாக  44 குடும்ப சுற்றுலாத் திட்டங்களை வழங்கவிருக்கிறது. 21 நிறுவனங்கள் இதில் பங்கேற்கும். 2024 நவம்பர் தொடங்கி 2025 ஜூன் 30ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

          சரவாக்,  பெர்லிஸ், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் நவம்பர் 16ஆம் தேதி இக்கொண்டாட்டத்தை முன்னெடுக்கும் முதல் மாநிலங்களாகும். மலாக்கா (நவம்பர் 20), கெடா (நவம்பர் 21), சபா (நவம்பர் 23) ஜோகூர்-பகாங் (நவம்பர் 24), பேராக் (நவம்பர் 26), திரெங்கானு- கிளாந்தான் (நவம்பர் 29), கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு (நவம்பர் 30) ஆகிய தினங்களில் கொண்டாடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here