கோலாலம்பூர்:
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் (Malaysia Aviation Group – MAG) தனது 1,260 விமானிகளுக்கும் உடனடியாகக் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15, 2026-க்குள் அனைத்து விமானிகளும் இந்தப் பரிசோதனையைச் செய்து முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போதைப்பொருள் பரிசோதனை செய்யத் தவறுகின்ற அல்லது மறுக்கின்ற விமானிகள் உடனடியாகப் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்கள் என MAG திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இக்கட்டாயப் பரிசோதனை முறை முதலில் விமானிகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து மற்ற அனைத்து விமானப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
போதைப்பொருள் வஹக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானி, கடந்த வாரம் இந்தோனேசியாவின் ஜகார்த்தா, சோயேகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கிராம் ‘எக்ஸ்டசி’ (Ecstasy) போதைப்பொருள் மாத்திரைகளுடன் பிடிபட்டார்.
அவரிடமிருந்த்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 13 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (RM13 million) அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட விமானி பணியில் இருக்கவில்லை என்றும், அந்த விமானத்தை இயக்கிய பணிக்குழுவில் இடம்பெறவில்லை என்றும் MAG தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் நிறுவனத்தின் உயர் தொழில்முறை நெறிமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என தெரிவித்துள்ள MAG, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானிகளின் உடல்-மனத் தகுதி ஆகியவற்றுடன் எப்போதும் எந்தவொரு சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என வலியுறுத்தியுள்ளது.























