கால பைரவரை வழிபடுபவர்கள் எதற்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை. கஷ்டங்களை போக்கும் கால பைரவரை அஷ்டமி திதியில் வழிபடுவது சிறப்பு. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிக மிக விசேஷமான நாளாக சொல்லப்படுகிறது.
கால பைரவர் ஜெயந்தி அல்லது பைரவாஷ்டமி என்பது கால பைரவரை போற்றும் மிக முக்கியமான விரத நாளாகும். சிவ பெருமானின் 64 ரூபங்களில் கால பைரவரும் ஒருவர். காசி நகரம் மட்டுமின்றி அனைத்து சிவன் கோவில்களின் காவல் தெய்வமாகவும் இவரே இருப்பதாக நம்பப்படுகிறது.
இவரே காலத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுகிறார். கால பைரவரை வணங்கினால் தீய சக்திகளின் பிடியில் இருந்தும், பாடாய் படுத்தும் கடுமையான துன்பங்களில் இருந்தும் விடுபட முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமி திதி கால பைரவருக்குரிய முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமியில் அதிகமானவர்கள் விரதம் இருந்து கால பைரவரை வழிபடுவது உண்டு. கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, தீமைகள், தாங்க முடியாத துன்பங்கள் ஆகியவை நீங்குவதற்காக பலரும் கால பைரவரை வழிபடுவது உண்டு. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இதை கால பைரவர் ஜெயந்தி என கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு கால பைரவர் ஜெயந்தி அல்லது பைரவாஷ்டமி நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை வருகிறது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 மணிக்கு துவங்கி, நவம்பர் 23ம் தேதி இரவு 11.45 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. இந்த நாளில் கால பைரவரை வழிபடுவதால் பாவங்கள், பயம், தடைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும். கால பைரவர் ஜெயந்தி அன்று கால பைரவரை வழிபடுவதால் தலையெழுத்து மாறும். நம்முடைய கெட்ட நேரம் என்பது மாறி, நல்ல காலம் பிறக்கும் என்பதாக ஐதீகம். நீண்ட காலமாக தீர்க்க முடியாத துன்பங்கள், நோய்கள், பல விதங்களில் தடைகள் சந்திப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது சிறந்தது.
கால பைரவர் ஜெயந்தி அன்று மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கால பைரவர் சன்னதியில் பஞ்சு திரியிட்டு நான்கு முக தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அல்லது சற்று பெரிய அகலில் நான்கு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேக பொருட்கள், சந்தனம் ஆகியவை வாங்கிக் கொடுப்பதும், சந்தன காப்பிடுவதும் சிறப்பான ஒன்றாகும். பைரவரின் வாகனமான நாய்களுக்கு அன்றைய தினம் உணவு வழங்குகிறது கால பைரவரின் அருளை பெற்றுத் தரும். கால பைரவரின் மனம் மகிழும் படி அன்றைய தினம் வழிபட்டால் அவர் நம்முடைய கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றுவார் என்பது நம்பிக்கை.
“ஓம் கால பைரவாய நமஹ”
கால பைரவர் காயத்ரி:
“ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்”
இந்த இரண்டு மந்திரங்களையும் 108 முறை சொல்வதும், எழுதுவதும் மிகச் சிறந்த பலனை தரும்.