ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில்: அடுத்தகட்டப் பணிகள் ஆண்டிறுதியில் தொடக்கம்

ஜோகூர் -சிங்கப்பூர் இணைப்பு ரயில் சேவைக்கான அடுத்தகட்டப் பணிகள் திட்டமிட்டபடி 2024ஆம் ஆண்டிறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளிலும் இந்த ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகள் செவ்வனே நடந்து வருகின்றன.

தண்டவாளம், சமிக்ஞை முறை, தொடர்புக் கருவிகள் போன்றவற்றைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம், மலேசியாவின் எம்ஆர்டி கார்ப்பரேஷன், ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ் ஆகியவை தெரிவித்தன.

சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் மலேசியாவின் பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான பிராசரானாவும் 2020ஆம் ஆண்டில் இணைந்து ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்சைத் தொடங்கின.

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான இந்த 4 கிலோமீட்டர் தூர ரயில் சேவையை நடத்துவதற்காக இக்கூட்டு முயற்சி தொடங்கியது.

இதற்கிடையே, சிங்கப்பூர் தரப்பில் 80 விழுக்காட்டு சிவில் உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

மலேசிய தரப்பில் 93 விழுக்காட்டு சிவில் உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இந்தத் தகவலை இருநாடுகளும் நவம்பர் 29ஆம் தேதியன்று கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.

கடல் மேல் செல்லும் ரயில் பாலம், நிலம் மேல் செல்லும் ரயில் பாலம் ஆகியவற்றுக்கான கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, 2024ஆம் ஆண்டிறுதியிலிருந்து சிங்கப்பூரில் உள்ள சிவில் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ் நிறுவனத்துக்குப் படிப்படியாக அனுமதி வழங்க நிலப் போக்குவரத்து ஆணையம் தயாராக இருக்கும்.

சிங்கப்பூரில், கட்டடக்கலைப் பணிகள், சாலைப் பணிகள், குடியிருப்பு நுழைவாயில்கள் போன்ற முக்கிய அம்சங்களைப் பொருத்தும் பணிகள் ஆகியவை ஒன்றின்பின் ஒன்றாக நடைபெறும்.

அத்துடன், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி ரயில் பாதையில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துடன் (உட்லண்டஸ் நார்த்தில் உள்ள சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் கட்டடத்தின் கீழ்த்தளம் 1ல்) ஜோகூர் பாரு-சிங்கப்பூர் எம்ஆர்டி நிலையத்தை இணைக்கும் பணிகள் 2025ஆம் ஆண்டில் தொடங்கும்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் எம்ஆர்டி சேவை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here