பிரபல நடிகர் அஜாஸ் கானின் மனைவியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நடிகர் அஜாஸ் கானின் ஜோதேஷவரி இல்லத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவரது வீட்டில் இருந்து பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி அஜாஸ் கானின் அலுவலக ஊழியர் சுராஜ் கௌத் ஐரோப்பிய நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் (Mephedrone-MD) என்ற போதைப் பொருளை ஆர்டர் செய்திருந்தார். இந்த கொரியர் அஜாஸ் கானின் அந்தேரி அலுவலகத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுராஜை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அஜாஸ் கான் மனைவி ஃபாலன் குலிவாலாவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஜோதேஷ்வரி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது 130 கிராம் எடை கொண்ட மாரிஜூவானா மற்றும் இதர போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குலிவாலா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அஜாஸ் கானிடம் போதைப் பொருள் பறிமுதல் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்க முயற்சித்துள்ளனர். எனினும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.