வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சமூகநல இலாகா உட்பட இதர அரசாங்க இலாகாக்களிலும் இழப்பீடு கோரலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுக் கூறினார்.
வெள்ளம் ஏற்படும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங்கத்தால் இழப்பீடு வழங்க முடியாது எனக் கூறி வருவதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

திடீர் வெள்ளம் ஏற்படும்போது வீட்டிலுள்ள பிராணிகள், மிருகங்கள் உட்பட இதர பொருட்களுக்கு இழப்பு ஏற்படும்போது அதற்காக சமூக நல இலாகா உட்பட இதர அரசாங்க அமைப்புகளிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோரலாம். அதனைச் சம்பந் தப்பட்ட இலாகாக்கள் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கும் எனப் பிரதமர் கூறினார்.
இதுபோன்ற திடீர் வெள்ளம் ஏற்படும்போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங் கத்திடம் இருந்து இழப்பீடு கோர முடியாது என சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இது உண்மை இல்லை. இதுபோன்ற இழப்பீடுகளை அரசாங்கம் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கும்.

மாறாக இதற்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க முடியாது. காரணம் இது குறித்து பல வழிகளில் அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். நேற்று மக்களவையில் கேள்வி – பதில் நேரத்தின்போது தம்பின் உறுப்பினர் (பாரிசான் நேஷனல்) டத்தோ முகமட் இசாம் முகமட் இசாவின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடலாம் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி முறையாகும். எனினும் இதற்கு சில வேளைகளில் விலக்கு அளிக்கப் படும் எனவும் அவர் கூறினார்.
சில சமயங்களில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மேல் முறையீடு செய்யும் போது அரசாங்கம் அது குறித்து பரிசீலிக்கும் எனவும் அவர் கூறினார். ஆனால் வழக்கமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் அவசியம் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் வேண்டும். காரணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதற்கு இது மிகவும் அவசியம் எனவும் அவர் கூறினார்.




















