தென்கொரியாவில் வியட்னாமிய சுற்றுப்பயணிகள் 38 பேரைக் காணவில்லை

சோல்:

தென்கொரியாவின் ‘ஜேஜு’ தீவில் வியட்னாமிய சுற்றுப்பயணிகள் 38 பேரைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் உத்தேச முயற்சி அது என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

‘ஜேஜு’ தீவை நவம்பர் 14ஆம் தேதி சென்றடைந்த கிட்டத்தட்ட 90 சுற்றுப்பயணிகளில் அவர்களும் அடங்குவர் என்று ‘யொன்ஹாப்’ செய்தி நிறுவனம் கூறியது. அவர்கள் ‘வியட்ஜெட் ஏர்’ மூலம் ‘நா டிராங்’ பகுதியிலிருந்து தென்கொரியா சென்றனர்.

தங்கள் பயணவிவர ஏட்டின் இறுதி நிறுத்தத்தில் காணாமல்போன அந்த 38 பேரும், நவம்பர் 17ஆம் தேதி திட்டமிட்டபடி வியட்னாமுக்குச் செல்லவிருந்த விமானத்தில் ஏறவில்லை.

விசா விலக்குத் திட்டத்தின்கீழ், வியட்னாம் உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் விசா இல்லாமல் 30 நாள்கள் வரை அந்தத் தீவில் தங்கமுடியும்.

இருப்பினும், செல்லுபடியான விசா இல்லாமல், அவர்கள் சோல், புசான் போன்ற தென்கொரியாவின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது.

“முழு வீச்சிலான கைது நடவடிக்கையைத் தொடங்க, ‘ஜேஜு’ கைதுக் குழுவை அமைக்க நாங்கள் திட்டமிடுகிறோம்,” என்று குடிநுழைவு அதிகாரி ஒருவர் கூறினார்.

‘ஜேஜு’ தீவை விட்டு வெளியேற, காணாமல்போன சுற்றுப்பயணிகளுக்கு டிசம்பர் 14ஆம் தேதிவரை கால அவகாசம் உள்ளதாக ‘யொன்ஹாப்’ தெரிவித்தது. அதன் பிறகு, அவர்கள் தென்கொரியாவில் கள்ளக்குடியேறிகளாகக் கருதப்படுவர் என்றும் அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here