பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் அமைப்புத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் ப. ராமசாமி நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியா, பாண்டா ஆச்சேக்கு பயணம் செய்வதற்காக இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த போது குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தனர்.
எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் இவர் கருப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மீது எம்ஏசிசி தற்போது நடத்தி வரும் விசாரணை தொடர்பில் இத்தடை விதிக்கப்படுவதாக அவர்கள் தகவல் கூறினர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக பேராசிரியர் ராமசாமி இருந்த போது முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்ற புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
பேராசிரியர் ராமசாமி பாண்டா ஆச்சேயில் இன்று அமைதி விருது பெறுவதாக இருந்தது. இதற்காக இன்று பிற்பகல் 12.25 மணிக்கு Firefly விமானம் மூலம் அவர் பினாங்கில் இருந்து ஆச்சே புறப்பட இருந்தார்.
இந்த நடவடிக்கை தமக்கு மிகுந்த வெறுப்பை தந்திருப்பதாக பேராசிரியர் ராமசாமி குறிப்பிட்டார்.