பாரிஸ்:
‘2027ம் ஆண்டு மே மாதம், தனது பதவிக்காலம் முடியும் வரை, அதிபர் பதவியில் நீடிப்பேன்’ என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. ஓட்டெடுப்பில், 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். தீர்மானம் வெற்றி அடைந்ததால், பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 2027ம் ஆண்டு மே மாதம் தனது பதவிக்காலம் முடியும் வரை, அதிபர் பதவியில் நீடிப்பேன். விரைவில் புதிய பிரதமரை அறிவிப்பேன்.
நீங்கள் எனக்கு வழங்கிய பொறுப்பில், இறுதிவரை பணியாற்றுவேன். அடுத்த ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்படும். பிரதமர் பர்னியரை வெளியேற்றுவதன் மூலம் குழப்பத்தை உருவாக்க இடதுசாரி கட்சிகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.