சிங்கப்பூரில் வேலை பார்க்க விரும்பும் ஜோகூரியர்கள் -ஜோகூர் மாநில ஹோட்டல் சங்கத் தலைவர்

ஜோகூர்:

ள்ளிப் படிப்பை முடிக்கும் ஜோகூர் இளையர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் அறைகளைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். பின்னர், அந்த அனுபவத்தைக் கொண்டு சிங்கப்பூரில் மேலும் சிறப்பான வேலைவாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இதனால், ஜோகூரில் உள்ள உள்ளூர் ஹோட்டல்களுக்கு போதுமான பணியாளர்கள் கிடைப்பதில்லை என்பதால் அங்கு ஹோட்டல் உரிமையாளர்கள் விரக்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

“அவர்கள் வருகிறார்கள், இங்கு வேலையைக் கற்றுக்கொள்கிறார்கள், பின்னர் உயர் ஊதியத்துடன் நல்ல வேலைவாய்ப்புகள், குறிப்பாக சிங்கப்பூரில் கிடைத்தவுடன், இங்கு வேலையை விட்டுச் செல்கின்றனர்,” என்று கூறுகிறார் மலேசியாவின் ஜோகூர் மாநில ஹோட்டல் சங்கத் தலைவர் ஐவன் டியோ.

இதனால்தான் ஜோகூர் ஹோட்டல் உரிமையாளர்கள் பணிக்கு ஆள் கிடைக்காமல் தவிப்பதாக அவர் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வி முடித்த பலர் தொடக்கத்தில் பயிற்சியுடன் கூடிய ஆரம்பகட்ட வேலைக்கு, மாதம் 1,200 ரிங்ட்டிலிருந்து 1,500 ரிங்கிட் வரையிலான வேலைக்கு வருகின்றனர்.

பயிற்சிக்காலத்தை முடித்த கையோடு அவர்கள் சிங்கப்பூரில் வேலை தேடிச் செல்கின்றனர் என்று திரு டியோ கூறினார். சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் அவர்கள் மாதம் 3,000 ரிங்கிட் வரை கைநிறைய எடுத்துச் செல்ல முடிவதாக விளக்கினார் டியோ.

இதனால், ஜோகூர் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வருகை தரும் நேரத்தையும் அவர்கள் வெளியேற வேண்டிய நேரத்தையும் மாற்றியமைத்து வருகையாளர்கள் ஒரு நாளில் 23 மணிநேரம் தங்க ஏற்பாடு செய்வது ஜோகூரில் சாத்தியமில்லை என்றும் அவர் சொன்னார்.

“ஹோட்டல் அறைகளைச் சுத்தம் செய்வதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லாதபோது ஹோட்டல்கள் புது வருகையாளர்களுக்குத் தயாராக இருக்க இயலாது,” என்றார்.

இதனால், அறைகளைச் சுத்தம் செய்ய, சமையல் அறை, பராமரிப்புப் பணிகளுக்கு வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்த மலேசிய அரசாங்கம் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here