ஜார்ஜ் டவுன்:
அனைத்துலக மராத்தான் (PBIM) 2024க்கு வசதியாக, பினாங்கு பாலம், தீவின் தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள பல சாலைகள் டிசம்பர் 14 இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை கட்டம் கட்டமாக மூடப்படும்.
பொதுவாக இரண்டாவது பினாங்கு பாலம் என்று அழைக்கப்படும் சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸாம் ஷா பாலமும் (JSAHMS) மூடப்படும் என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அமாட் கூறினார்.
PBIM 2024 இந்த பாலத்தில் நடப்பது இதுவே முதன்முறையாகும், ஏனெனில் நிகழ்வு முன்பு பினாங்கு பாலத்தில் நடைபெற்றது.
42-கிலோமீட்டர் கொண்ட இந்த அனைத்துலக மராத்தான் (PBIM) 2024 ஓட்டமானது பண்டார் காசியாவில் உள்ள சாலைகள் மற்றும் JSAHMS வழியாக செல்லும். இதன் விளைவாக, சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை சாலை மூடல் நடைமுறைக்கு வரும் என்பதால், பொதுமக்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
அதேநேரம் தென்மேற்கு மாவட்டத்தில், ஜார்ஜ் டவுனில் இருந்து JSAHMSக்கு செல்லும் அனைத்து சாலைகள் மற்றும் பத்து கவான் நோக்கிச் செல்லும் பத்து மாங் ஆகியவை மூடப்படும் என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எனவே தீவை அணுகுவதற்கு பினாங்கு பாலத்தை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்துமாறு சாலைப் பயனாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் சாலைப் பயனாளிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் ஹம்சா வலியுறுத்தினார்.
இந்த அனைத்துலக மராத்தான் (PBIM) 2024 இல் சுமார் 64 நாடுகளைச் சேர்ந்த 22,000 க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று அதன் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.