ஜாசின் (JASIN), மார்ச் 17, 2026 :
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) 193.8 கி.மீ தெற்கு நோக்கிய திசையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், பிக்கப் டிரக் ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
அதிவேகமாக வந்த டிரெய்லர் ஒன்று மோதியதில், பிக்கப் டிரக் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக நம்பப்படுகிறது.
இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்தது என்றும், மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அதிகாலை 2.28 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றபோது, டிரெய்லரும் பிக்கப் டிரக்கும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்தன. பிக்கப் டிரக்கிற்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர், வெளியேற முடியாமல் உடல் கருகி உயிரிழந்தார். அதேநேறம் விபத்துக்குள்ளான டிரெய்லரின் 54 வயது ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
மீட்புப் படையினர் போராடி தீயை அணைத்த பிறகு, சிதைந்த வாகனத்திலிருந்து ஓட்டுநரின் உடலை மீட்டனர். உயிரிழந்தவரின் உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















