‘கடவுளே அஜித்தே…’ என அழைக்க வேண்டாம்… ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் அஜித்

சென்னை,தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அஜித் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே…’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு பார்வையாளர்களை கவனம் ஈர்த்து வருவதுதான் அந்த புது பாணி.

‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டை தெரிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும் கவன ஈர்ப்பு மந்திரம்தான், இந்தக் ‘கடவுளே அஜித்தே…’ கூச்சல். தாங்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் ‘கடவுளே அஜித்தே…’ எனச் சொல்ல வைத்த புண்ணியவான்களின் எந்த ‘விடாமுயற்சி’க்கும் பலன் கிடைத்தபாடில்லை!

இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு நேரடியாக கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘கடவுளே அஜித்தே’என்ற இந்த கோஷம் என்னை கவலையடைய செய்திருக்கிறது எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here