சித்திரவதை, பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் இருந்து சிறார்களை பாதுகாப்பதற்கு 2001 சிறார் சட்டத்தில் இன்னும் விரிவான விதிமுறைகளை அறிமுகப்படுத்தி மிகக் கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இந்த உத்தேச சட்டத் திருத்தங்களானது பல்வேறு சித்திரவதைகளில் இருந்து சிறார்களை காப்பாற்றுவதற்காகும் என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் குளோபல் இக்வான் சென்டிரியான் பெர்ஹாட் , அபாங் பஸ் போன்ற சம்பவங்கள் இந்த சட்டத் திருத்தங்களுக்கு காரணிகளாக அமைந்திருக்கின்றன.
குளோபல் இக்வான் நிறுவனத்திற்கு சொந்தமான தொண்டூழிய இல்லங்களில் பல்வேறு துன்பங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்த 400 க்கும் அதிகமான சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. சிறார் சட்டம் திருத்தப்படுவதற்கு இச்சம்பவமும் ஒரு முக்கிய காரணம் ஆகும் என்று நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.