புதுடெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிரான போராட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 19) மோசமடைந்தது.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக), காங்கிரஸ் உறுப்பினர்களிடையே வாக்குவாதத்தில் தொடங்கி, போராட்டம், தள்ளுமுள்ளு, காவல்நிலையத்தில் புகார் வரை சென்றது.
உறுப்பினர்கள் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பாஜக, காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றச் சாலையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
பரஸ்பரம் குற்றம்சாட்டி ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தியதால் நாடாளுமன்ற வளாகம் அல்லோலகல்லோலப்பட்டது.
மோதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரதாப் சிங் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை ராகுல் தள்ளிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் நிராகரித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஜகவினர் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
ராகுல் காந்தி மீது பாஜக உறுப்பினர் மூவர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
ராகுல் காந்தியின் பொறுப்பற்ற நடத்தையால் பாஜகவின் எம்பி காயமடைந்துள்ளதாக ஒடிசா முதல்வர் சரண் மாஜீ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த ஒடிசா முதல்வர் சரண் மாஜீ, வன்முறைக்கு இடமில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.
எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் 17ஆம் தேதி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து தொடங்கிய சர்ச்சை, இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.
புதன்கிழமை இரு அவைகளும் முடங்கிய நிலையில், வியாழக்கிழமை காலை இரு அவைகளிலும் அம்பேத்கர் விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டது. அமளி ஏற்பட்டு இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பகல் 2 மணிக்கு அவை கூடியவுடன் ராகுல் காந்தியின் செயலைக் கண்டித்து மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.
அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித்ஷா விலக வேண்டும் என்றும் மக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.