அலோர் காஜா:
பேருந்து, டிரெய்லர் உட்பட மூன்று வாகனங்கள் சம்மந்தப்பட்ட விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட எழுவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வடக்குப் பாதையின் கிலோமீட்டர் 204 இல் சிம்பாங் அம்பாட் டோல் சாவடிக்கு வெளியேறும் இடத்திற்கு அருகே நிகழ்ந்ததாக, மலாக்கா மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற தோயோட்டா எஸ்திமா வாகனம், இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 29 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து, இரண்டு பேரை கொண்ட டிரெய்லர் ஆகியவை விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார்.
மேலும் மீட்புப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களை அகற்றும் பணி மீட்புக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் டிரெய்லர் லோரியின் டயர் கழன்று நடு ரோட்டில் கிடந்தது என்றும், அப்போது பேருந்து அந்த டயரை மோதிக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.