உலகின் மிக நீளமான விரைவு சுரங்கச்சாலையைச் சீனா திங்கட்கிழமை (டிசம்பர் 30) கட்டி முடித்துள்ளது. ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதியில் உள்ள பனி மூடிய மலைகளைக் குடைந்து கட்டப்பட்டுள்ள இந்த விரைவு சுரங்கச்சாலை அடித்தளக் கட்டுமானத்தில் ஒரு மைக்கல்.
இந்த 22.13 கிலோ மீட்ட தூர தியான்ஷன் ஷெங்லி விரைவு சுரங்கச்சாலை செயல்பாட்டிற்கு வந்ததும், உலகின் மிக நீளமான மலைத்தொடர்களில் ஒன்றான தியான்ஷன் மலைகளின் வழியான பயண நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து ஏறக்குறைய 20 நிமிடங்களாக குறையும்.
வடக்கு – தெற்கு ஜின்ஜியாங்கிற்கு இடையிலான இணைப்பை கணிசமாக அதிகரிப்பதுடன் பட்டுச் சாலை பொருளியல் வட்டாரத்தில் ஒரு முக்கிய பகுதியான இப்பகுதி, யுரேஷிய நாடுகளுக்கு மேலும் திறந்துவிடப்படும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஜின்ஜியாங்கில் உள்ள மாநிலத் தலைநகரான உரும்ஷியிலிருந்து தெற்கு ஜின்ஜியாங்கில் உள்ள யூலி கவுண்டி வரை இயங்கும் 319.72 கிலோ மீட்டர் உரும்ஷி-யூலி விரைவுச்சாலையின் ஒரு முக்கியப் பகுதியான புதிய சுரங்கச்சாலை, இரு பகுதிகளுக்கும் இடையிலான பயண நேரத்தை ஏழு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்கும். சுரங்க விரைவுச்சாலை 2025ல் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கப் பணிகள் 2020 ஏப்ரலில் தொடங்கின. 3,000 மீட்டருக்கும் அதிக உயர மலைகள், சிக்கலான நில அமைப்பு போன்ற பல சிரமங்களைக் கட்டுமானக் குழு எதிர்நோக்கியது.
சீனாவில் சுரங்கச்சாலை அமைக்க, தனியாக வடிவமைக்கப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதால் கட்டுமான நேரம் 10 ஆண்டுகளில் இருந்து ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டது என்று பாதையை அமைத்த, ‘சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ஜின்ஜியாங் டிரான்ஸ்போர்டேஷன் இன்வெஸ்மெண்ட் அண்ட் டிவெலப்மென் காப்ரேஷன்’ எனும் கட்டுமான நிறுவனம் மேலும் கூறியது.
“இந்தத் துறையில் வெளிநாடுகளின் தொழில்நுட்ப ஏகபோகத்தைத் தகர்த்து, புத்தாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளோம்,” என்று நிறுவனத்தின் சுய் ஜிங்சுவான் கூறினார்.