கோலாலம்பூர்:
கடந்த அக்டோபர் மாதம் ஜெட்டாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல மலேசிய நகைச்சுவை நடிகர், போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் தற்போது சவுதி அரேபியாவில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த விசாரணையின் போது நகைச்சுவை நடிகருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சிறையில் இருக்கும் போது குறித்த நகைச்சுவை நடிகர் நல்ல நடத்தையை வெளிப்படுத்தினால், அவர் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரம் கூறியது.
“தீர்ப்பின் அடிப்படையில், அவரது சிறைத்தண்டனை இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகம், கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி மலேசியன் ஒருவர் ஜெட்டாவில் தடுத்து வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. இருப்பினும், அந்த நபரின் அடையாளத்தை அது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.