ஜோகூர் பாரு:
இன்று காலை 9 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளநிலைமை சீரடைந்து வருகிறது.
தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 247 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் இன்னமும் அங்குள்ள 12 துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
இந்நிலையில், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் ஜோகூரில் உள்ள எந்த ஆற்றிலும் நீர்மட்டம் இதுவரை ஆபத்தான நிலையை எட்டவில்லை என்றாலும், குளுவாங்கில் உள்ள சுங்கை கஹாங் மற்றும் மெர்சிங்கில் உள்ள சுங்கை ஜெமாலுவாங் ஆகியவை முறையே 14.36 மீட்டர் மற்றும் 1.69 மீட்டர் நீர்மட்டத்துடன் எச்சரிக்கை அளவுக்கு அண்மையில் உள்ளன.
இன்று காலை நிலவரப்படி, ஜோகூர் பாரு, சிகாமாட், குளுவாங், தாங்காக் மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் தெளிவான வானம் காணப்பட்டது, அதேநேரம் மற்ற மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





















