ஈப்போ: பங்கோர் தீவின் பாசிர் போகோக் கடற்கரையில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஜனவரி 15) காலை 11.24 மணிக்கு உடல் கண்டெடுக்கப்பட்டதாக மஞ்சோங் காவல் துறை துணை ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். பங்கோர் காவல் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும், அவர்கள் அந்த பகுதிக்கு பணியாளர்களை அனுப்பி சோதனை செய்தனர்.
அந்த நபர் மயக்க நிலையில் இருப்பதை அவர்கள் கண்டனர். மேலும் பங்கோர் சுகாதார மருத்துவமனை ஊழியர்களால் பரிசோதிக்கப்பட்டதில் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் வியாழக்கிழமை (ஜனவரி 16) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் அந்த நபர் நீரில் மூழ்கி இறந்திருப்பது கண்டறியப்பட்டதாகவும் ஏசிபி ஹஸ்புல்லா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஜனவரி 1 ஆம் தேதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் பங்கோர் நிலையத்தை 05-6851222 என்ற எண்ணிலும், செயல்பாட்டு அறையை 05-6886222 என்ற எண்ணிலும் அல்லது வாட்ஸ்அப் ஹாட்லைனை 014-6828005 என்ற எண்ணிலும் அழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.








