சிங்கப்பூரில் சென்ற ஆண்டு விற்கப்பட்ட புதிய கார்களில் BYD கார்கள்தான் ஆக அதிகமாக விற்கப்பட்டன என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு 6,191 BYD கார்கள் விற்கப்பட்டன. சீனாவைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனம் ஒன்று சிங்கப்பூரில் ஆக அதிகமான புதிய கார்களை விற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சென்ற ஆண்டு விற்கப்பட்ட புதிய கார்களில் 14.4 விழுக்காட்டு கார்கள் BYD கார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. BYD பெயரில் வெளியிடப்படும் கார்கள், ‘Denza’ எனும் அதன் சொகுசு கார்கள் ஆகிய இருவகை கார்களுக்கும் இந்தப் புள்ளி விவரம் பொருந்தும்.
கடந்த 2023ஆம் ஆண்டில் புதிய கார் விற்பனையில் BYD நான்காம் நிலையில் வந்தது. சீன நிறுவனம் ஒன்று முதல் 10 இடங்களுக்குள் முடித்தது அதுவே முதல்முறை.
சென்ற ஆண்டுக்கான புதிய கார் விற்பனை பட்டியலில் Toyota நிறுவனம் இரண்டாம் இடத்தில் வந்தது. அந்நிறுவனம் போர்னியோ மோட்டோர்ஸ் வாகன விற்பனை நிறுவனத்தின் மூலம் 5,736 கார்களை விற்றது.
டொயோட்டா, 2023ல் முதலிடத்தைப் பிடித்தது.
டொயோட்டாவின் சொகுசுப் பிரிவு காரான லெக்சஸ் கார்களின் விற்பனையும் அந்த எண்ணிக்கையில் அடங்கும்.
பிஎம்டபிள்யு மீண்டும் முன்றாவது இடத்தில் வந்தது. அது, சென்ற ஆண்டு 5,042 கார்களை விற்றது.
பர்ஃபோர்மன்ஸ் மோட்டோர்ஸ், யூரோகார்ஸ் (Performance Motors, Eurokars) ஆகிய இரு வாகன விற்பனை நிறுவனங்களின் மூலம் சிங்கப்பூரில் பிஎம்டபிள்யு கார்கள் விற்கப்படுகின்றன.
கார் விற்பனைப் பட்டியலில் இடம்பெறும் மற்றொரு மின்சார கார் நிறுவனம் டெஸ்லா. பிஒய்டி, டெஸ்லா ஆகிய இருண்டு மட்டும்தான் பட்டியலில் இடம்பெற்றுள்ள மின்சார கார் நிறுவனங்கள்.
2023ல் ஒன்பதாவது இடத்தில் முடித்த டெஸ்லா, சென்ற ஆண்டு நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் வந்தது. அந்நிறுவனம் சென்ற அண்டு 2,384 கார்களை விற்றது.
ஒட்டுமொத்தமாக சென்ற ஆண்டு 43,022 புதிய கார்கள் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் பதிவான 30,225 கார்களைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை அதிகமாகும்.