ஜோகூர்:
ஜோகூரிலுள்ள பண்டார் பாரு உடாவில் ஒரு சொகுசு காரில் ஒரு தாயும் அவரது பதின்ம வயது மகளும் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட தாயின் தொலைபேசியில் கிடைத்த கடைசி குறுஞ்செய்திகளின் அடிப்படையில், 42 வயது தாயும் அவரது 14 வயது மகளும் அருகில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்ததாகவும், பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்க காருக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது என்று, வட ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் கூறினார்.
ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், காரின் எஞ்சினில் பெட்ரோல் கசிவு இருந்ததாகவும், இதனால் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் புகை வந்ததாகவும் நம்பப்படுகிறது. அதேநேரம் “இதுவரை, எந்த குற்றவியல் கூறுகளும் இந்த சம்பவத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரின் சடலங்களும் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 23) இரவு 10 மணியளவில் ஒரு வழிப்போக்கரிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக ஏசிபி பல்வீர் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) ஜோகூர் பாரு வடக்கு போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.




















