கோலாலம்பூர்:
அடுத்தாண்டு இந்திய சமூகத்திற்கான மானிய ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பரிந்துரை செய்வேன் என்று தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உறுதியளித்தார்.

அடுத்தாண்டு இந்தியர்களின் சமூகப் பொருளாதார உருமாற்றத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு குறித்து நான் தற்போது தரவுகளைச் சேகரித்து வருகிறேன்.
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாத இந்திய சமூகத்திற்கான 136 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு பிரதமர், தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆதரவோடு அமைச்சின் வாயிலாக நான் எடுத்த முயற்சியின் வழி கிடைக்கப் பெற்றதாகும்.

வழங்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் இந்திய சமூகத்திடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. அடுத்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்.எனவே அரசாங்கத்திடம் தாக்கல் செய்வதற்கு நாங்கள் தரவுகளைச் சேகரித்து வருகின்றோம்.

அதேசமயம் இந்திய சமூகத்திற்கான தொழில்முனைவோர் திட்டங்களை அதிகப்படுத்துவதற்கான உத்தரவின் அடிப்படையில் இந்த விவகாரத்தையும் பரிசீலனை செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கடந்த 4 மாத காலகட்டத்தில் இந்திய சமூகத்திற்கு 136 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கியிருப்பது இந்திய சமூகத்தை வலுப்படுத்துவதில் மடானி அரசாங்கத்தின் பொறுப்புடைமையும் முயற்சிகளையும் எடுத்துரைக்கிறது என்றார் அவர்.

அதில் பிரிவ் -ஐ திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட், ஸ்பூமி கோபிக் திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட், பெண் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் ரமணன் சுட்டிக்காட்டினார்.





















