4 லட்சம் ரிங்கிட் செலவில் தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை என்னவானது?

பி.ஆர்.ராஜன்

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாடிக் இந்திய சமுதாயத்திற்கான செயல்திட்டத்தை (Pelan Tindakan Masyarakat India – PTMI) உருவாக்கினார்.

மலேசிய இந்தியர் உருமாற்றப்  பிரிவு (மித்ரா) , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு  கூட்டத்தில் இத்திட்டம் குறித்து அவர் விளக்கம் அளித்தார். அப்போது பங்கேற்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கருத்துகள்,  பரிந்துரைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த செயல்திட்டத்தை வரையும் பொறுப்பு, பிரபல அரசாங்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அவர் பணியாற்றிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மலாய், இந்தியர விரிவுரையாளர்களும் இந்த ஆய்வு அறிக்கையை  தயார் செய்தனர்.

இதற்காக ஒற்றுமைத்துறை அமைச்சு கிட்டத்தட்ட 4 லட்சம் ரிங்கிட் வழங்கியது என்று நம்பப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கை என்ன ஆனது என்பதற்கு இன்றளவும்  பதில் இல்லை.

மஇகாவின் சமூக மேம்பாட்டு கரமான ஒய்.எஸ்.எஸ். டாக்டர் டென்னிசன் ஜெயா சூரியா தலைமையில் மலேசிய இந்தியர் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த பெருந்திட்டம் என்னவானது?

 இப்படியாக ஒவ்வொரு முறையும் பல ஆய்வு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது மட்டுமே பதிலாக கிடைக்கும்.

பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு அறிக்கைகள் யாவும் என்ன ஆனது? அவை எங்கு வைக்கப்பட்டுள்ளன? என்பது விடை தெரியாத கேள்வியாகவே உலா வந்து கொண்டிருக்கிறது.

மஇகா செடிக் வழி (பின்னர் மித்ராவாக பெயர் மாறியது) ஒரு பெருந்திட்டத்தை தயாரித்து தந்தது. இதற்காக நாடு முழுவதும் ஆய்வு பட்டறைகள்  நடத்தப்பட்டன. கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள், சமுதாய பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துகளும் கேட்கப்பட்டு ஆய்வறிக்கை தொகுக்கப்பட்டது.

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் முதலாவது மலேசிய இந்தியர் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. அதுவும் என்ன ஆனது என்பது தெரியாமல் போனது. இப்படியாக ஒவ்வொரு புதிய அரசாங்கம் அமையும்போதெல்லாம் இந்தியருக்கான பெருந்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒன்றாவது செயல்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது இன்றளவும் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்தல் வரும் போதெல்லாம் இந்திய சமுதாயத்தை கைதூக்கி விடப்போகிறோம் என்று குரல்கள் திக்கெட்டு திசையிலும் ஒலிப்பதை கேட்கலாம். இருப்பினும் பொதுத் தேர்தல் முடிந்ததும் நினைத்த காரியங்கள் கை கூடியதும் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக கலந்து விடும்.

சத்தம் போட்டாலும் கத்திக் கதறினாலும் கிணற்றில் போட்ட கல்லாகவே இந்த பெருந்திட்ட அறிக்கைகள் கேட்பாரற்று போய்விடும். ஆகக் கடைசியாக இன்றைய மடானி அரசாங்கத்தில் இப்படி ஒரு புதிய ஆய்வை ஒற்றுமைத்துறை அமைச்சு நடத்தி இருக்கிறது.

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை ஒரே நாளில் முடிவு செய்து விட முடியாது. அவர்களின் தேவைகள் என்ன என்பதை துல்லியமாக முடிவு செய்வதற்கு பல காலங்கள் தேவை. ஆண்டுக் கணக்கிலும் ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் எந்த ஆய்வும் இதுவரை இந்திய சமுதாயத்தில் மேம்பாட்டிற்காக அவர்களின் சமூகப்  பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதற்காக அந்த ஆய்வறிக்கைகளும் பெருந்திட்டங்களும் அறவே பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அதுமட்டுமன்றி ஆகக் கடைசியாக மலேசிய இந்தியர்களின் தேவைகளை ஆய்வு செய்யும் பொறுப்பை சரவாக்கை சேர்ந்த பெமாண்டு என்ற தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒற்றுமைத்துறை அமைச்சு கிட்டத்தட்ட 3 லட்சத்து 50.000 ரிங்கிட்டை அந்த நிறுவனத்திற்கு வழங்கி  இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

மலேசிய இந்தியர்களின் தலை எழுத்தையும் அவர்களின் எதிர்காலத்தையும் பெமாண்டு என்ற தனியார் நிறுவனம்தான் தீர்மானிக்கப்போகிறதா? மித்ராவையும் இனி அதுதான் நிர்வகிக்கப்போகிறதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here