ஈப்போ:
பேராக்கின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தை விரிவுபடுத்த 60 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பேராக்கில் அனைத்துலக விமான நிலையத்தை அமைக்கவேண்டும் என்று நீண்டகாலமாக இருந்துவரும் கனவை நனவாக்கக்கூடிய சூழல் உருவெடுத்துள்ளதாக பேராக் மந்திரி பெசார் சரானி முகமட் பெருமை தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விமான நிலையம் என வகைப்படுத்தப்பட சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்துக்கான விரிவுபடுத்தல், புதுப்பிப்புப் பணிகள் முக்கியம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
“விமான நிலையம் திட்டமிட்டபடி விரிவுபடுத்தப்பட்டால் மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திற்கு பெரிதும் நன்றியுடன் இருக்கும், அதன் முழு ஆதரவை வழங்கும். ஈப்போவில் இருக்கும் விமான நிலையத்தை மேம்படுத்தவேண்டும் என்பது நீண்டகாலமாக இருந்துவரும் நம்பிக்கையாகும். திட்டமிட்டபடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டால் குறைந்த இடைவெளியில் கூடுதலான அனைத்துலக விமானச் சேவைகளை ஈர்க்க முடியும். அதன் மூலம் பயணத் தொடர்புகளுக்கு மெருகூட்ட முடியும், வாய்ப்புகளை உருவாக்க முடியும்,” என்று பண்டார் ஸ்ரீ பொத்தானியில் நடைபெற்ற விற்பனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அதில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சரானி கூறினார்.
தற்போது ஸ்கூட், சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து தினந்தோறும் மூன்று விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற நாடுகளிலிருந்தும் பல்வேறு விமானச் சேவைகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.





















