கோலாலம்பூர்:
2025 ஆம் ஆண்டுகான மாநில அளவிலான பொங்கல் கொண்டாட்டம், கடந்த சனிக்கிழமை செகிஞ்சானில் நடைபெற்றது.

இதற்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்றார். இது தொடர்பில் அவர் தனது facebook இல் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “பொங்கல் என்பது இந்திய இந்து சமூகத்தின் பாரம்பரியம் மட்டுமல்ல, நல்லிணக்கம் மற்றும் கடின உழைப்பு, பொறுமை, நன்றிக்கடன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பகிர்ந்து கொள்வது போன்ற உன்னதமான ஒரு வெளிப்பாடு” என்றார்.

மேலும் சிலாங்கூர் மாநிலம் அதன் பமுகத்தன்மை மற்றும் இணக்கமான சமூகத்தைப் பற்றி மிகவும் பெருமை கொள்கிறது. நம் மாநிலத்திற்கு கலாச்சார பன்முகத்தன்மை ஒரு தடையல்ல, மாறாக சிலாங்கூர் சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒரு பாலம் என்பதை இந்தப்பொங்கல் கொண்டாட்டம் நிரூபித்துள்ளது.

இந்தப் பொங்கல் கொண்டாட்டம், இனங்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், சிலாங்கூர் மக்களிடையே நல்லெண்ண உணர்வை வளர்க்கவும் ஒரு தளமாகத் தொடரும் என்று நம்புகிறேன் என்று கூறிய மந்திரி பெசார், மாநில அரசாங்கத்தின் ஐ-சீட் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு வியாபாரத்திற்கான உதவிப் பொருட்களையும் வழங்கினார்.

அத்தோடு “இந்தக் கொண்டாட்டத்தை ஒழுங்கமைத்து வெற்றியடையச் செய்த மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN), சபாக் பெர்ணாம் மாவட்ட கவுன்சில் (MDSB) மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அப்பதிவில் அவர் மேலும் கூறினார்.



























