கோலாலம்பூர்,
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற்ற 15ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது பருவத்தின் 3ஆவது கூட்டத்தொடரில் நிறை வேற்றப்பட்ட 7 சட்டங்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்தார் என்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் நேற்று அறிவித்தார்.
மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்திற்கு முன்னதாக அவர் இத்தகவலைச் சொன்னார். 2025 விநியோ கச் சட்டம் (பட்ஜெட் 2025), 2024 நிதிச் சட்டம், 2024 வரி வசூலிப்பு நிர்வகிப்பு அமலாக்கச் சட்டம், 2024 லாபுவான் வணிக நடவடிக்கை வரிச்சட்டம் (திருத்தப்பட்டது), 2024 தொற்றுக்கிருமி தடுப்பு கட்டுப்பாட்டுச் சட்டம் (திருத்தப்பட்டது), 2024 தொடர்பு, பல்லூடகச் சட்டம் (திருத்தப்பட் டது), 2024 நீர்ச்சேவை தொழில்துறைச் சட்டம் (திருத்தப்பட்டது) ஆகியவையே மாமன்னரின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் அந்த 7 சட்டங்கள் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே இந்த மக்களவைக் கூட்டத் தொடர் முழுவதும் அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டு ஆக்கப் பூர்வமான முன்னுதாரணமாக இருக்கும்படி சபாநாயகர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவுறுத்தினார். மக்களவையின் நிரந்தர ஆணைக்குக் கட்டுப்படத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜொஹாரி எச்சரித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது விவாதங்களில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் முதிர்ச்சியுடன் நாகரிகத் தின் உச்சபட்சக் கொள்கைகளையும்ருக்குன் நெகாரா நெறிமுறைகளையும் நிலைநிறுத்தும்படி அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதேசமயம் மாண்புமிகு உறுப்பினர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களின் பிரதிநிதிகளாக மக்களின் பிரச்சினைகளுக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் அவரின் அரச உரையில் சரியான நேரத்தில் நினைவுறுத்தி இருப்பதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இதனிடையே கடந்த நாடாளுமன்ற மேலவைக் கூட்டத்தொடரில் எவ்விதத் திருத்தங்களும் இன்றி 26 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் டத்தோ அவாங் பிமி அவாங் அலி பாசா தகவல் அளித்திருப்பதாக ஜொஹாரி மக்களவையில் அறிவித்தார்.




















