தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருள்நெறியில் தைப்பூசத்தை கொண்டாடுவோம் – டத்தோஸ்ரீ புலவேந்திரன் வலியுறுத்தல்

பி.ஆர் ராஜன்

ஜார்ஜ்டவுன்: பினாங்கில் நடைபெறவுள்ள தைப்பூசத்திருவிழாவை தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருள்நெறியை பின்பற்றி தைப்பூசத் திருநாளை கொண்டாடுவோம் என்று மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் தேசிய உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில  துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் வலியுறுத்தினார்.

அமைதி, எளிமை முருகப் பெருமானின் உயர் நெறி அணிகலன்கள் ஆகும். அவருக்காக உண்ணா நோன்பு இருந்து மனத்தை ஒரு நிலைப்படுத்தி நேர்த்திக் கடனை எளிமையாக நிறைவேற்றிட வேண்டும்.

இந்நிலையில் செல்வச் செழிப்பைக்காட்டும் ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் முருகப் பெருமான் வழிபாட்டுக்கு முரணானது ஆகும். இவை நம்முடைய வழிபாட்டு கலாச்சாரத்திற்கும் பண்பாட்டுக்கும் உகந்தது அல்ல என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் குறிப்பிட்டார்.

தைப்பூச வழிபாடு நிறைவான, தெளிவான ஆன்மிகத்தையும் உயர் பக்தியையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.  மற்ற சமயத்தவர்கள் மதிப்பதாகவும் இருக்க வேண்டும். முகம் சுழிக்க வைக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

தைப்பூசம் முருகப் பெருமானை வழிபடும் ஒரு புனித நாளாகும். ஆன்மிக பண்புகள் எங்கும் நிறைந்திருக்க வேண்டும்.

பெண்கள் அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்து ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம். கொள்ளையர்களிடம் அவற்றை பறிகொடுத்துவிட்டு துன்பப்பட வேண்டாம்.

எளிமைதான் தைப்பூச கொண்டாட்டத்திற்கு அழகு சேர்க்கும். அதேபோன்று பிள்ளைகளை உடன் அழைத்து வருபவர்கள் மிகவும் கவனத்துடனும் எச்சரிகையுடனும் இருக்க வேண்டும். பிள்ளைகளின் பாக்கெட்டுகளில் வீட்டு முகவரி, கைத் தொலைபேசி ஆகியவற்றை வைத்தால் பெரும் பயனாக இருக்கும்.

மதுபானம் அருந்திவிட்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அவலத்தை சில ஆண்கள் கைவிட வேண்டும். பெண்களை தொந்தரவு செய்யும் போக்கும் கூடாது. பொது உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஆலய நிர்வாகம் விதித்திருக்கும்  அனைத்து நிபந்தனைகள், விதிமுறைகள், வழிகாட்டிகள் ஆகியவற்றை பக்தர்கள் முழுமையாக அனுசரிக்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் போலீஸ், ரேலா படையினர் விழாக்காலம் முழுவதும் ஈடுபட்டிருப்பதால் பக்தர்கள் நிம்மதியாக வழிபாடு செய்து நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றலாம் என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் கூறினார்.

கூட்ட நெரிசலில் அடாத செயல்களைப் புரிந்து பக்தர்களை குறிப்பாக பெண்களை நோகடிக்க வேண்டாம். பரஸ்பர மரியாதை, உயர் கட்டொழுங்கு நம் சமுதாயத்திற்கு நற்பெயரை தந்திடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தைப்பூசத் திருவிழாவிற்கு வருகிற பக்தர்கள் நம்முடைய மரபுகளை, பண்புகளை பிரதிபலிக்கும் பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும் என்றும், அது நம் கலாச்சாரத்தைக் காக்கும் ஒரு முக்கியமான அடையாளமாக திகழும் என்றும் டத்தோஸ்ரீ புலவேந்திரன் வலியுறுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here