தைப்பூசத்தை முன்னிட்டு பத்து மலை நடைபாதைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பழுதுபார்ப்பு பணிகள் நிறைவு

கோலாலம்பூர்:

த்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலுக்குச் செல்லும் நடைபாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மலேசியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

தைப்பூச விழா முடிந்ததும் கோம்பாக் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) மூலம் நிரந்தர பழுதுபார்ப்புடன் திட்டம் தொடரப்படும் என்று நந்தா மேலும் சொன்னார்.

இங்குள்ள நடைபாதையின் உள்கட்டமைப்பு அம்சங்களையும், அங்குள்ள பல உள்கட்டமைப்புகளையும் சரிசெய்வதற்கு இந்த திட்டத்திற்கு RM1 மில்லியன் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள தைப்பூசத் திருவிழாவிற்கு பத்துமலைக்கு மில்லியன் கணக்கான இந்து பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, பத்துமலைக் கோயில் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

மேலும் இந்தக் கொண்டாட்டத்திற்கான ஒழுங்கைப் பேணுவதற்காக பத்துமலையைச் சுற்றி 1,500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார்கள் என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here